மலர்விழி நான்கு வருடமாக அமெரிக்காவில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறாள். சுத்தமான ஊர், மக்கள் அனைவரும் சட்டவிதிகளைப் பின்பற்றி வருகிறார்கள். சாலைகள் எல்லாம் பெரிதாகவும், வாகனம் ஓட்டுவதற்கு எளிதாகவும் இருக்கின்றன. குறிப்பாகச் சுதந்திரம் அதிகம். நமது ஊர் போல் அல்லாமல் யாரையும் சாராமல் இங்கு வாழ முடியும். மாலை நேரங்களில் நம்மூரில் கிடைக்காத நேரங்கள் இங்கு கிடைக்கும், நாம் கற்க வேண்டியவற்றையும் , பொழுதுபோக்குக்கானச் செயல்களையும் செய்வதற்கு வழிகளும் நேரங்களும் அமைந்திருக்கின்றன. அலைச்சல்களும், ஒலிமாசுகளும் குறைவு.

நமக்கென்று ஒரு வாகனம்; வீட்டிலேயே வேலையைச் செய்து முடிக்கும் வசதி; அனைத்து வசதிகளும் வீட்டின் அருகே; சுத்தமான காற்று; சுற்றிப்பார்க்கப் பல்லாயிரம் இடங்கள்; விண்ணைத்தொடும் அளவிற்கு கட்டிடங்கள்; பல அற்புதக் கருவிகள்;  தொழில்நுட்பத்தின் உச்சியில் நிற்கும் ஒரு இடம் தான் இது. இயற்கையும் பாதிக்காமல் பசுமையாகவும், மரங்களும் சூழ்ந்து இருக்கும். ஒரே வரியில் கூற வேண்டுமானால், அமெரிக்காவில் பற்பல வசதிகளுடன் எளிதான வாழ்க்கை வாழ முடியும்.

கேட்கவே எவ்வளவு ஆனந்தமாக இருக்கின்றது. மலர்விழியும் இந்த இடத்திற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக்கொண்டும், செய்யவேண்டியவற்றைச் செய்தும் ஆனந்தமாய் காலத்தை ஒட்டிக்கொண்டு போனாள். அழகான வீடு, சுற்றுபுறம், நவீன வசதிகள் என காலம் அமைதியாகச் சென்றுகொண்டிருந்தன. விஞ்ஞானத்தின் பற்பல அதிசயங்கள் உலகை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தது. உலகத்தின் எத்திசையில் இருந்தாலும் உடனுக்குடன் தொடர்புகொள்ள பற்பல வசதிகள் வளர்ந்துவிட்டன.

மலர்விழிக்கு ஒரே ஒரே குறை மட்டும் மனதை உருத்திக்கொண்டிருந்தது நெடுங்காலம். வேலைக்காக புதிய புதிய ஊர்களுக்கு அடிக்கடிச் செல்வதால், புதிய மனிதர்களுடன் அறிமுகம் கிடைக்கிறது; பல தகவல்களும் கிடைத்துக்கொண்டிருந்தன. ஆனால், பழைய தொடர்புகளை தொடர்புகொள்ளாமலும் ,அதைப் பற்றி பெரிதாக கவலைகொள்ளாமலும் இருப்பதால், தொடர்புகொள்ளும் பழக்கமே சற்று குறைந்து விட்டது என்று உணர்ந்து வருந்தினாள். இப்படி பல நண்பர்களின் உறவுகள் காற்றில் கரைவது போல் காணாமல் போய்விட்டன. பெற்றோர்களுக்குக் கூட எதோ கடமை என்று தான் தினமும் தொலைபேசியில் அழைப்புவிடுத்து வந்தாள். தொடர்புசாதனங்கள் பெருகப் பெறுக தொடர்பின்மையும் பெருகிக்கொண்டிருக்கிறது என்பது முற்றிலும் மறுக்க முடியாத உண்மையே!

திடீரென்று பல வருடங்கள் கழித்து பழைய நண்பருக்குத் தொடர்புகொண்டால், முன்பு பேசியது போல பேச முடியுமா என்ற குழப்பம் ஒரு பக்கம், நண்பர்களுக்குப் புதிய குடும்பங்கள், கால மாற்றம் நடந்திருக்கும், இப்போது தொடர்பு கொண்டால், அதே பாசமும், நேசமும் இருக்குமா என்பது சந்தேகம் தான்.

காலம் காயத்தை சரிசெய்யும் என்பதை விட, காலம் பழையதை மறக்கடிக்கச் செய்யும் என்பதே உண்மை. தொடர்பு தொடர்ந்து இருந்தால் தான், பழைய உரிமைகளும், நகைச்சுவை நேரங்களும் தொடரும்.

மலர்விழி, சில நண்பர்களுக்குத் தொடர்புகொண்டு பேச முயற்சித்த பொது, அவர்களின் திருமணத் தாக்கம் தெளிவாக புரிந்தது. நேரம் குறைவு, குழந்தைகள், புதிய உறவுகள் என நேரத்திற்கு ஏற்றார் போல அவர்களுடைய முக்கியத்துவங்கள் மாறிவிட்டன.

நண்பர்கள் கோபத்தோடு பேசுவார்கள் ஏன் இத்தனை நாட்கள் பேச வில்லை?” என்று கேட்பார்கள் என எதிர்பார்த்தாள். அனால், அவர்களிடம் அப்படிப்பட்ட எதிர்பார்ப்புகள் தென்படவில்லை. பல வருட இடைவெளியினாலும், அவர்களின் திருமணம் , புதிய உறவுகள், கடமைகள், அலைச்சல்களின் தாக்கம் என பல மாற்றத்தால் பழைய அழகிய தருணங்களை மறந்து சாதாரணமாகத்தான் பேசினார்கள். இடைவெளி பழைய உரிமையைக் கொடுக்கவில்லைஒரு காலத்தில் தோழிகளிடத்தே கலகலப்புடன் பேசிய தருணங்களை நினைத்து இப்போது அதைத் தவற விட்டோமே என்று வருந்தினாள்.

அடுத்தமாதம் ஒரு மாதம் விடுமுறை எடுத்து ஊர்க்கு செல்லவேண்டி திட்டம் போட்டிருந்தாள். வீட்டிற்கும், உறவினர்களுக்கும் பல பொருட்கள் வாங்கி பல எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்தாள்.

அந்நாள் வந்தது, மலர்விழி ஊருக்கு வந்தவுடன், பெற்றோர் பெருமகிழ்ச்சி அடைந்தனர். மலர்விழிக்குப் பிடித்த உணவுகளையும், பண்டங்களையும் செய்து கொடுத்து நேரம் பார்க்காமல் பேசிக்கொண்டு மகிழ்ந்தனர். உறவினர்கள் பலர் வந்து வந்து மலர்விழியைப் பார்த்துவிட்டுச் சென்றனர். பார்த்தவர்கள் அனைவரும் கூறிய ஒரு வரி ” புள்ள ரொம்ப எளச்சுட்டா!” என்பது தான்.

தாத்தா-ஆயா ஊருக்குப் பெற்றோருடன் சென்றாள். நவீன வசதிகள் இல்லையென்றாலும், கிராமங்களின் மண்வாசனையும், உழவு நிலங்களும், பயிர்களும், சிறிய ஆறும், சேரும் சகதியும் மலர்விழிக்கு ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்தன. ஒரு வாரம் அங்கேயே இருந்து நுங்கு வெட்டி சாப்பிட்டுக்கொண்டும், கிராமத்து உணவைப் பாசத்துடன் கலந்து சாப்பிட்டும், உழுநிலங்களைச் சுற்றித்திரிந்தும், சொந்தக்காரர்களுடனும், அவர்களின் குழந்தைகளுடனும், தாய் மாமன்களிடம் வம்புக்குச் சென்று ரூபாய்களை பெற்றும், கன்றுக்குட்டிகளுடனும் ஆட்டுக்குட்டிகளுடனும் விளையாடி மகிழ்ந்தாள். இவள் மகிழ்ச்சியைப் பெற்றால் என்பதை விட பெற்றோருக்கும், தாத்தா பாட்டிக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தாள் என்பதே உண்மை. பிள்ளையையும், பேரக்குழந்தையையும் பார்த்து மகிழாதவர்கள் உண்டோ?

family-tree-cartoon

அதுவும் சொந்த ஊருக்குச் சென்றால் தான் நமக்கு எவ்வ்ளவு உரிமைகள். மாமா, சித்தப்பா அத்தை, பெரியம்மா, பெரியப்பா, சித்தப்பா சின்னமா, அவர்களுது பிள்ளைகள் என அனைவரும் நம்மை இளவரிசியைப் போல் கவனிப்பார்களே!.

பாட்டி ஊரில் இருந்த பலரும் வந்து மலர்விழியைப் பார்த்துவிட்டு, அவர்கள் பயிரிட்ட எதாவது ஒரு பயிரை பையில் போட்டுக் கட்டிக் கொடுத்தனர்.
அதிரசம், கொழுக்கட்டை, முறுக்கு, இட்டிலி, தோசை, வேர்கடலைச் சட்டினி, நாட்டு மரவள்ளி, பனங்கிழங்கு, நுங்கு, இளநீர், சோளம், வாழையிலைச் சாப்பாடு, காராமணி உருண்டை, கம்பங்கூழ், வெதும்பிய மாங்காய், மோர்மிளகாய், கருவாட்டுக் குழம்பு, நாட்டுக்கோழி முட்டை என பலவற்றை மகிழிச்சி பொங்கச் சுவைத்து பாட்டி வீட்டில் இருந்து திரும்பினாள்.

வீட்டிற்குத் திரும்பி, கிடைத்த சில நாட்களில், நண்பர்களுடன் தொடர்பு கொண்டு சந்தித்தாள். “முகம் மாறிவிட்டது, எடை கூடிவிட்டது” என்று அரட்டை அடித்திக்கொண்டு பேசி மகிழ்ந்து நண்பர்களிடம் தொடர்பை மீண்டும் மேம்படுத்திக்கொண்டாள். இவ்வளவு நாள் யாரிடமும் அதிகம் பேசாமல் இருந்துவிட்டு இப்பொது விடுமுறையில் கலகலவென்று நட்புக்களுடன் கூடி உரையாடுவது அழகிய பறவைகளின் ஒலியைக் கேட்பது போல உணர்ந்தாள்.

whatsapp-image-2016-11-20-at-2-19-52-pm

விடுமுறைக் காலம் முடியும் நேரம் வந்துவிட்டது. வேலை செய்யும் ஊர்க்கு(நாட்டிற்கு) சில நாட்களில் கிளம்ப வேண்டும். அவளது பெற்றோருக்கு இந்த ஒரு மாதம் தான் இவ்வருடத்தின் அழகான காலமாக இருந்தது. அவர்களின் உடல்நலமும், குரலும் புத்துணர்வு பெற்று ஆற்றலோடு இருந்தன. 

கிளம்பும் அன்று பல உறவினர்கள் வழியனுப்ப வந்தனர். அனைவரும் ” ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிடும்மா!, ஒல்லியா இருக்க பாரு!, நேரம் கிடைக்கும்போது போன்ல(தொலைபேசியில்) கூப்பிடுமா ” என தனித்தனியே வந்து சொல்லிவிட்டுச் சென்றனர். 

ஒவ்வொரு வருடமும் ஒரு மாதம் இப்படி விடுமுறையில் வருபவள் தான். ஆனால், இப்போதுதான் பெற்றோர்களின் அந்த மகிழ்ச்சியின் காரணத்தை உணர்ந்தாள். பெற்றோர்கள் தன் பிள்ளைகளை சந்திக்கும்போது மகிழ்வதின் காரணம், அப்பிள்ளைகளை விட்டுத் தனியே இருக்கும் நேரங்களில் கொடுமையான வலிகளோடு வாழ்கிறார்கள் என்பதுதான். தொழில்நுட்பம் ஆயிரம் வசதிகளைக் கொடுத்தாலும் நேரில் கூடி மகிழ்ந்து, ஒன்றாக அமர்ந்து உணவுண்டு, புன்னகையைப் பரிமாறி, தொலைகாட்சியில் படம் பார்த்து” செலவழிக்கும் நேரங்கள் தான் “நேரங்கள்”. அவர்களின் தனிமையைப் பிள்ளைகளுக்கு ஒருபோதும் சொல்வதில்லை. நாமும் தொலைபேசி வசதி, முகம் பார்த்துப் பேசும் வசதி அவர்களுக்கு தனிமையைக்கொடுக்காது என்று நினைத்துக்கொண்டு காலத்தை ஓட்டிச் செல்கிறோம்.

இந்தப்பதிவு மலர்விழியின் கதை அல்ல. நம் ஒவ்வொருவரின் கதையே. அனைவரும் ஒரு முறையாவது யோசித்திருப்போம்.
தாய்க்கும் சேய்க்கும் இருக்கும் பாசம் மூளை வளர்ச்சி பெற்றவுடன் மழுங்கச் செய்கிறது. பாசத்திற்கும், தொடர்புகொள்வதற்கும் ‘நேரமும், வேலையும்’ தடை அல்ல. நமது அலட்சியம் தான். புதியதோர் மாயையைப் பார்த்தவுடன் அதிலே மூழ்கிவிடுகின்றறோம்.

நட்பும், உறவும் நம் வாழ்வின் அங்கங்கள். அதைச் செழிக்க வைக்க அவர்களிடம் சிறிது நேரத்தைச் செலவழித்து இன்ப துக்கங்களை பரிமாறிக்கொண்டாலே போதும்.
இரு நிமிடத் தொலைபேசி  அழைப்பின்(நல்லா இருக்கீங்களா? சாப்பிட்டீங்களா? ) மூலம் பல புன்னகைகளைப் பெருக்கிக்கொள்ளலாம். 

தொடர்பு தொடர்ந்து தொடர்ந்தால்தான் அத்தொடர்பு தொடரும்.

குறுங்செயலிகள் மூலம் தகவல்களைப் பகிர்வதை விட நமது குரல் மூலம் விசாரிப்பதிலே அன்புகள் பரிமாறும்; என்றும் மறக்கமுடியாத அழகிய தருணங்களும், நகைச்சுவை நேரங்களும், அறம் தரும் பல வாய்ப்புகளும் நமக்கு கிட்டும்!

முதுமைக்கு முன்பு நாம் சேமிக்க வேண்டியது பொருள் மட்டும் அல்ல, பல அழகிய உறவுகளும், நட்புக்களும் கூட. 

நட்பின் தொடர்பை வள்ளுவர் அழகாக விளக்குகிறார்.

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

உரை:
படிக்கப் படிக்க இன்பம் தரும் நூல் போல, நல்ல குணமுடையவரின் நட்பு பழகப் பழக மகிழ்ச்சி தரும்.

நன்றி நட்புக்களே! 
– ச. சமரசம்

11 comments

 1. அமெரிக்கா போறோம்னு ஜாலியா சொல்லிட்டு வந்தேன் . இங்க வந்த பின்னாடி எப்படா ஊருக்கு போயி சந்தோசமா இருப்போம்னு இருக்கு.

  1. ம்ம்.. ஆம் தோழி. பலருக்கு அவ்வேதனை இருக்கு.

   பிழைப்பை தேடி மனதைத் தொலைத்து விடுகின்றோம்.

   இன்னும் பலர், எது வாழ்க்கையென்று அறியாமல், ஒரே நாளை திரும்ப திரும்ப சுழற்சியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

   நவீனம் நாம் தான் கையாள வேண்டுமே தவிர அது நம்மை கையாளக்கூடாது.

  1. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நண்பரே!

   தொடர்பில் இருப்போம்; நட்பைச் செழிக்கச் செய்வோம்!

 2. This is what Samarasam narration. He has the talent which shows the imagination before our eyes via his words. Excellent narration Samarasam.

  More over what I felt is, it’s not மலர்விழி but சமரசம்…

  1. வாழ்த்திற்கு நன்றி நன்றி நண்பா.

   ஆம், இது என் கதை தான். அனால், கதையை அழகுபடுத்தியவள் மலர்விழி தான்.
   மலர்விழி = மலர் போன்ற அழகிய விழிகளை உடையவள் ==> “அழகிய பார்வை” ==> என்னுடைய அலட்சியங்களை மட்டும் கூறாமல், இக்கைதையின் மூலம் நாம் அனைவரும் தொடர்பில் இருக்க வேண்டும் என்ற பார்வையைக் கொடுக்கிறாள் அவள்.

 3. Real story of those who live abroad awwy from family for their work. Enna than skype, hang out nu vanthalum, nerla pathu pesura mathri ennaikum varathu!! 🙁

  1. முற்றிலும் உண்மை தோழி.

   விஞஞானம் உணர்வுகளைக் கொடுக்கத் தவறிவிட்டது.

   சொர்க்கமே என்றாலும், நம் சொந்த ஊரும், சொந்தங்களும் போல வராது அல்லவா!

  1. உங்கள் கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோதரி.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *