சுயசிந்தனை எனக்கூறப்படும் ஆறாம் அறிவின் மூலம், நாம் இன்று பல சாதனைகளையும், கொடிய செயல்களையும் செய்து கொண்டிருக்கிறோம்.
ஆறாம் அறிவால், மனிதன் தன் உணர்ச்சிகளை அழுகையால், ஓவியத்தால், எழுத்துக்களால் வெளிப்படுத்தினான்.
குளிருக்கும், வெயிலுக்கும் பயந்து ஒதுங்காமல், ஆடையைக் கண்டுபிடித்து பயன்படுத்தினான்.
இடம்பெயர சக்கரத்தைக் கண்டுபிடித்தான். செயற்கை இறக்கையின் மூலம் பறவையாய் பறந்தான்.
பிறகு வரும் சந்ததிக்கு பயன்படும் வகையில், தனது கருத்துகளைப் பதித்து வரலாறாக்கினான்.

இப்படி ஒவ்வொரு நாளும் வியக்கும் வகையில் வளரும் நாம், பிற அறிவு உயிரினங்களிடம் இருந்து “தன் இனத்தைக் காப்பது” என்ற ஒன்றை கற்றுக்கொள்ளத் தவறி விட்டோம். மனிதன் மட்டுமே தன் அறிவைப் பயன்படுத்தி, தன் இனத்தையும், இயற்கையையும் அழிப்பவன். பிற அறிவுடைய உயிரினங்கள், உணவுச் சங்கிலியின் அடிப்பைடயில் பிற உயிர்களை வேட்டையிட்டாலும் , தன் இனத்தைக் காத்துக் கொண்டு தான் இருக்கின்றன.

கலை, மொழி, அறிவியல் என வளர்த்து பல நாகரிக வளர்ச்சியை அடைந்த மனிதன், தனக்குள் ஆசையை வளர்த்தான்.

ஆசை பல புதிய சாதனைகளைப் படைத்தது, ஆசைப்பட்டதையெல்லாம் உருவாக்கியது. ஆசை வளர்ச்சி கொடுத்தது; ஆசை பேராசையாக வளர்ந்தது இன்பத்தைக் கொடுத்தது;

இன்பம் மனிதனை அடிமையாக்கியது; சோம்பேறியாக மாற்றியது; அறிவை சிதைக்கத் தொடங்கியது.

பல இன்பங்களால் சிதைந்த மனிதன், மேலும் மேலும் செல்வத்தைக் குவித்தான்.
எளிதில் செல்வம் பெற வழி வகுத்தான். அச்செல்வத்திற்கு அடிமையானான்.

செல்வம், அவனுக்கு பொறாமையும், சுயநலத்தையும் கொடுத்து பிற மனிதனை எதிரியாக மாற்றியது.

மனிதன், பிற மனிதர்களை எதிரியாகப் பார்த்ததால், தன் இனம் என்று கூட அறியாமல், வேற்றுமையை வளர்த்துப் போரிட்டான்.
தனித்தனியாக பிரிந்து பகையை வளர்த்தான். பிற மனிதனைக் கொன்றான்,

sudan-5455

ஒருவிதத்தில், மனிதன் மனிதனையே இரையாகக் கண்டான்

இதனால் எந்நாளும் தன் இனத்தைப் பார்த்தே பயந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
(மனிதனைத் தவிர வேர் எந்தக் குடும்பமும் தன் குடும்பத்தைப் பார்த்து பயப்படாது.)

அன்று கலைகளை வளர்த்த மனிதன், இன்று எந்திரம் போல ஓடிக் கொண்டிருக்கிறான்.
தேவைகளை அதிகப் படுத்தி, அதை ஈட்டவே தன் இளமைக் காலத்தை செலவழிக்கிறான்.
அறிவியல் ஆக்கத்திற்கு மட்டுமே என்று உணராமல், அதை அழிவிற்கு பயன்படுத்தி, நோய்க் கிருமிகளை உருவாக்கி, தானே தமக்கு நோயை உண்டாக்கிக் கொள்கிறான்.

உண்மையில், ஆறாம் அறிவை எவ்வளவு சிறப்பாகப் பயன்படுத்த முடியும்?
இன்று நம்மில் பலர்,
கல்வி, வேலை, திருமணம்,
உடனே வீடு வாங்க வேண்டும், அதற்கு வீட்டுக்கு கடன்,
வருமானத்தை வளர்த்து செலவை பெருக்கி ஈடு செய்து கொண்டு,
கடனை அடைத்து முடிக்கும்பொழுது முதுமையின் கதவுகள் திறந்தவண்ணம் உள்ளன.

இப்படி ஒரு சுழற்சியைத்தான் அனைவரும் காலங்காலமாக செய்து வருகின்றோம் வாழ்க்கையை வாழாமல்.
தனக்கு என்ன பிடிக்கும் என்று பலர் தெரியாமலே, எந்தப் பாதையையும் தேர்ந்தெடுக்காமல் மரம் போல் ஒரு வாழ்க்கையை வாழ்கின்றனர்.

ஒற்றுமையோடு தன் இனத்தைப் பாதுகாத்து, பிற கலைகளையும் , மொழிகளையும் மதித்து, பிற உயிரினங்களைக் காத்து, இயற்கையோடு வாழ்ந்து,

தனக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து, அதில் வெற்றி கண்டு, பயனுள்ள பலவற்றை உண்டாக்கி, அறிவியலால் ஆக்கத்தை உண்டாக்கி ; அழிவை அழித்து,

கல்வியோடு, அன்பும் பண்பும் வளர்த்து, நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கி,
உலகம் முழுவதும் சுற்றி, இவ்வுலக அழகைப் பார்த்துக் கவி பாடி,
மக்களோடு மக்களாய், பிற உயிரினங்களைக் காப்பவனாய்,
இன்பமும், ஆரோக்கியமும் கலந்து வாழ்க்கையை வாழ வேண்டும்.

fb_img_1448205109679

ஆறாம் அறிவின் நோக்கம் “வாழ்க்கையை அழகாக வாழ்வதற்கே”.

உலகத்தில் கற்க வேண்டியவை கோடிக்கணக்கில் உள்ளன.
பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய பற்பல அதிசயங்கள் ஒளிந்திருக்கின்றன.
கற்க வேண்டிய இலக்கியங்களும், சுவைக்க வேண்டிய புத்தகங்களும் உயிரற்றுக் கிடக்கின்றன.
நலன் தரும் பல கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்காமல் இருக்கின்றன.
சுற்றி பார்த்துச் சுவைக்க புவியின் பல கிளைகள் காத்திருக்கின்றன.
இனிமை தரும் பல்வேறு கலைகள் இருக்கின்றன.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இன்று நாம் செய்யும் செயலே , எதிர்காலத்தில் நம் பெயரை எடுத்துச் செல்லும்.
நாம் தான் நமக்கான பாதையைத் தேர்ந்தெடுத்து, கற்க வேண்டியவற்றைக் கற்று, வாழ்க்கையை வாழ்ந்து அழகிய எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்.

உங்கள் கருத்தினைப் பகிருங்கள்.
வாழ்க்கையை வாழுங்கள்.
– சமரசம்

2 comments

    1. ம்ம்.. அப்படி அனைவரும் சிந்தித்தால், மனிதாபிமானம் காப்பாற்றப் படும் தோழி.
      உங்கள் வரியை அனைவரும் படிக்க வேண்டும்; மிக்க நன்றி !

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *