“””தமிழ இலக்கியச் செல்வங்களை மீண்டும் சுவைக்க வைப்பதற்கான ஒரு முயற்சி”””

நாகரிக வளர்ச்சியில் சிகரம் தொட்டு, கணினிமயமான உலகத்தில் வாழும் நமக்கு பகை, பொறாமை, ஏமாற்றம், ஒற்றுமையின்மை, அன்பின்மை, கொடிய எண்ணம் என எண்ணற்ற குறைகள் தான் மிஞ்சுகிறது. நமது நாகரிக வளர்ச்சியில் தவறா? அல்லது நாம் பின்னோக்கிச் செல்கிறோமா?

பணம் படைத்தவனுக்கு பண்பு இல்ல.
பெரிய உடல் படைத்தவனுக்கு எதிர்ப்பு சக்தி இல்ல.
தேர்ந்தெடுத்த தலைவனுக்கு மக்கள் மேல அன்பு இல்ல.
பகுத்தறிவு பெற்றும், பிற உரினங்கள் போல்,  நம் இனத்தைக் காக்கும் ஒற்றுமை நமக்கு இல்லையே!

காரணம் என்ன?  வாழும் வரைமுறை என்ற ஒன்றை நாம அனைவரும் கடைபிடிக்கத் தவறியதால் தான். “எனக்கு அறிவு இருக்கிறது. நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன்” என்று கூறுவது சரிதான். அப்படி இருக்க, நாம ஏன் வருடம், கிழமை, நேரம் என திட்டமிட்டு செயல்படனும்? அப்படி ஒரு வரையறுக்கப்பட்ட ஒன்றை பின்பற்றுவதனால் தானே வேலை என்ற ஒன்றை சிறப்புடன் செய்ய முடியுது? விலங்குகளுக்கு விடுமுறை இல்லை, கிழமைகளை பின்பற்றுவதில்லை. அவைகள் போலவே இருந்திருக்கலாமே! “திங்கள் முதல் சனி – உழைக்கும் நாட்கள்”, “ஞாயிறு – விடுமுறை”, “மூண்டு முறை உணவு உட்கொள்ளுதல்”, “காலை / மாலையில் –  உடற்பயிற்சி” என நேரத்தைச் சித்தரித்து வாழ்வதால் தானே ஒரு செயலைச் சிறப்புடன் செய்ய முடிகின்றது?

நேரத்தைத் தாண்டி சித்தரிக்கப் பட வேண்டியவைகள் ஏராளமா இருக்கு. வேலையும் பணத்தையும் தாண்டி உடல்நலம், கல்வி, அறிவியல் ஆராய்ச்சி, தனக்கென்ற ஒரு அடையாளம், அன்பு, பண்பு, குடும்பம், புன்னகை, ஒற்றுமை என நம்முள் செதுக்கப்படவேண்டியவைகள் பற்பல . அதற்கு உதவும் வகையில் தான் நமது  முன்னோர்கள் பல்லாயிரம் இலக்கியங்களை கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

தினமும் ஒரே வேலையை செய்து, தனக்கென்ற ஓர் அடையாளமில்லாமல் வாழ்வது வாழ்க்கையல்ல!

“எப்படி முன்னேற வேண்டும்? எப்படி பேச வேண்டும்? எப்படி ஒரு போரில் வெல்ல வேண்டும்?
எப்படி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்? எப்படி நேரத்தையும், செல்வங்களையும் செலவு செய்ய வேண்டும்?
எப்படி செல்வந்தனாக உயர்வது? எப்படி வரலாற்றில் இடம் பிடிப்பது?
எப்படி விலங்குகளிலிருந்து மனிதனாக வேறுபட்டு மனிதர்களுடன் ஒன்றுபட்டு வாழ்வது?”

என்ற அனைத்துக் கேள்விகளுக்கான விடைகளை நம் முன்னோர்கள் இலக்கியங்கள் மூலம் அழகிய சிற்பங்களை விட்டுச்சென்றுள்ளனர்.

தமிழ் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்தோன்றிய மொழி மட்டும் அல்ல. பல்லாயிரம் ஆண்டுகளின் அனுபவங்களைத் தொகுத்து வைத்த செம்மொழி.
ஒப்புரவு ஒழுகு – காலத்திற்கு ஏற்றார் போல மாறு ” என்னும் ஆத்திசூடி போல் எக்காலத்திற்கும் பொருந்தும் பல்லாயிரம் செல்வங்கள் தான் நமது இலக்கியங்கள். அவற்றில் சில பாடல்களைச் சுவைத்து பின்பற்றுவோமே!

1. பேசும் முறைமை:

ஆசாரக்கோவை – 76  கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார்

“விரைந்துரையார்; மேன்மேல் உரையார்; பொய் யாய பரந்துரையார்; பாரித்து உரையார்;
ஒருங்கெனைத்தும் சில் எழுத்தினானே பொருள் அடங்கக் காலத்தால் சொல்லுக செவ்வி அறிந்து.”

பொருள்:
விரைவாகப் பேசக்கூடாது. திரும்பத் திரும்பச் சொல்லக்கூடாது. பொய்யான செய்திகளைப் பரிந்துரைக்கக் கூடாது. சொல்லவேண்டியவற்றை தெளிவாக, சொற்களை ஒருங்கிணைத்து , குறைந்த சொற்களால் சரியான பருவம் அறிந்து சொல்ல வேண்டும்.

2. தமக்கு மருத்துவர் தாம்:

முதுமொழிக்காஞ்சி – 149 கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார்

“எமக்குத் துணையாவார் வேண்டுமென் றெண்ணித்
தமக்குந் துணையாவார்த் தாந்தெரிதல் வேண்டா
பிறர்க்குப் பிறர்செய்வ துண்டோமற் றில்லை
தமக்கு மருத்துவர் தாம். “

பொருள்:
அளவுக்குமீறி உண்டு நோயைத் தாமே உண்டாக்கிக் கோடலின், அந்நோயைப் போக்கும் ஆற்றலும் அவர்க்கு உண்டாம். அதுபோல, தமக்குப் பிறர் வாயிலாக வருந் துன்பங்கள் யாவும் தம்மாலேயே செய்துகொள்ளப்பட்டனவாதலின், அதனைத் தாமே நீக்குதல் வேண்டு மென்பதாம்.பிறரைத் தேடுதல் கூடாது.
‘தமக்கு மருத்துவர் தாம்’ என்பது பழமொழி.

3. மென்சொல்:

நல்வழி – 33  ஔவையார்

“வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம்(;) வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது – நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.”

பொருள்:
பெரிய யானையைக் கொல்லக்கூடிய அம்பு பஞ்சு மூட்டையை ஊடுருவிச் செல்ல இயலாது.
கொடிய கடப்பாறையால் பிளக்க முடியாத பாறை மென்மையான மரத்தின் வேருக்கு உடைந்து வழி விடும். அது போல கொடிய குணங்களால், வன்மையான சொல்களாலும் எவற்றையும் வெல்ல முடியாது. மென்சொல்லும், இனிமையான குணங்களும் தான் வெற்றிக்கு வழி வகுக்கும்.

4. கேட்டல்:

குறள் – 414  – திருவள்ளுவர் 

“கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.”

பொருள்:
நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டால்,
அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.

5. கற்கும் முறை: 

ஔவையாரின் தனிப்பாடல்

“சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்,
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம், – நித்தம்
நடையும் நடைப்பழக்கம், நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்”

பொருள்:
வரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் ஆகிவிடும். பேசப் பேசச் செந்தமிழும் பழக்கமாகிவிடும். திரும்பத் திரும்ப நினைத்தால் கற்றது மனத்தில் பதிந்துவிடும். நல்லொழுக்கத்தைத் திரும்பத் திரும்பக் கடைப்பிடித்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஆனால், நல்லவர் நட்பு, இரக்கக் குணம், கொடைப் பண்பு ஆகியவை பிறவியிலேயே பதிந்திருந்தால்தான் வரும்

6. இளமைக் கடன்:

சிறுபஞ்சமூலம் -18  காரியாசான்

“முன் பொருள் செய்யாதார் ஆதரே;
‘துன்பம் இலேம், பண்டு, யாமே வனப்பு உடையேம்!’
என்பர், இரு கால் எருது.”

பொருள்:
முதுமைக்கு இளமையிலேயே பொருள் தேடாதவர் அறிவிலார், முன்பு  ஒரு காலத்தில் நான் செல்வமுடையவராக இருந்தேன், அதனால் துன்பம் இல்லாமலும், அழகாகவும் உடலநலத்துடன் இருந்தேன் , அனால் இப்போது இழந்துவிட்டேன் என்று சொல்வோர் இரு கால் விலங்குகளுக்கு ஒப்பாவார்.

7. தகுதியான தலைவனைத் தேர்ந்தெடுப்போம்:
பழமொழி நானூறு – 44 முன்றுறை அரையனார்

“அடையப் பயின்றார்சொல் ஆற்றுவராக் கேட்டால்
உடையதொன் றில்லாமை யொட்டின் – படைபெற்று
அடைய அமர்த்தகண் பைந்தொடி! அஃதால்
‘இடையன் எறிந்த மரம்’.”

பொருள்:
ஒருவன் ஒருவரிடம் ஒரு பொருளைக் கேட்கும்போது ” தன்னிடம் மிகச்ச சிறந்த வேறொரு பொருள் இருக்கின்றது. பிறகு அதை உனக்கு இதற்க்கு பதிலாகத் தருகிறேன்” என்று வாக்களித்துக் கேட்பது ‘இடையனால் வெட்டப்பட்ட மரத்தினைப்‘ போன்றதாகும்.

அதாவது இடையன் கொஞ்சங் கொஞ்சமாகக் கிளையை ஒடித்தே ஒரு மரத்தை அழித்து விடுகிறான். அது போலவே, இல்லாததைத் தருவதாக வாக்களிப்பவனின் புகழும், கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்து அழிந்து போம். ‘இடையன் எறிந்த மரம்’ என்பது இக்கருத்தை விளக்கும் பழமொழி.

நம்மில் எத்தனைப் பேர் இக்கருத்துக்களைப் பின்பற்றுகிறோம்? உலகம் இதைப் பின்பற்றியிருந்தால், இன்று உலகம் பசுமையாக இருந்திருக்கும். பிற உயிரினங்கள் மனித இனத்தைப் போற்றியிருக்கும்.

அடுத்த பாகத்தில் மேலும் சில சுவைமிகுந்த சங்கப்பாடல்களைச் சுவைப்போம்!

நன்றி!
-சமரசம்

2 comments

    1. மிக்க நன்றி சகோதரரே! அடுத்த பதிவில் மேலும் புதிய இலக்கியப் பாடல்களைச் சுவைப்போம்.தங்கள் நண்பர்களுக்கும் பதிவுகளை பகிருங்கள்!
      நன்றி!

Leave a Reply to Fazil RF Cancel reply

Your email address will not be published. Required fields are marked *