௧. திருக்குறளுக்கு வள்ளுவர் இட்ட பெயர் என்ன?
முப்பால்

௨. மொத்தம் எத்தனை ஔவையார் தமிழ் வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர்.
சான்றுகள் படி இரண்டு. இரண்டிற்கும் மேலானவர்களும் இருந்திருக்கலாம்.
சங்ககாலத்தில் வாழ்ந்த ஔவையார் “ஆத்திசூடி”யை எழுதியவர்.
நீதி நூல்களான மூதுரை, நல்வழி ஆகியவற்றை எழுதியவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார்.

௩. தென்றல் என்றால் என்ன?
தென்றல்   – தெற்கிலிருந்து வரும் காற்றின் பெயர்
வாடை    – வடக்கிலிருந்து வரும் காற்று
கொண்டல் – கிழக்கிலிருந்து வரும் காற்று
கச்சான்   – மேற்கிலிருந்து வரும் காற்று

௪. தாய்மை என்ற சொல் போல தந்தைக்கான சொல் எது?
தாதைமை

௫. யாப்பிலக்கணம் என்றால் என்ன?
செய்யுள் எழுத்துவதற்குரிய முறைகளைக் கூறும் இலக்கணம் யாப்பிலக்கணம்.

௬. “தாலி” என்பது என்ன?
தாலி => தாலம் என்பது பனை ஓலையில் இருந்து செய்யப்பட்ட ஒரு அணிகலன்/பொருள். இதை கயிற்றில் சேர்த்து பெண்ணுக்குக் கட்டும் பழக்கமாக இருந்தது.
காலப்போக்கில் அணிகலன்களின் மோகம் மற்றும் வர்த்தகத் தாக்கத்தால் மாறி இன்று தங்கத்தில் உருமாறி இருக்கிறது.

௭. “இடக்கரடக்கல்” என்ற சொல்லின் பொருள் என்ன?

சில சொற்களைத் தவிர்த்து அவை சுட்டும் பொருளை வேறு வழியில் மறைமுகமாகக் குறிப்பிடுதல்.
நாகரிகம் கருதி சில சொற்களை வெளிப்படையாக கூறாமல், வேறு சொற்களைக் கொண்டு கூறுதல்.

எ. கா:
யாராவது பணம் கேட்டால், அதைத் “தர முடியாது ” என்று சொல்வதற்குப் பதிலாக “நாளை வாருங்கள்” என்று சொல்லி அனுப்புவது.
ஒருவன் பேசிய “கெட்ட வார்த்தையைச்” சொல்ல “பச்சையாய் பேசுகிறான்” என்று நாகரிகம் கருதி கூறுவது.

௮. பூக்காமல் காய்க்கும் தாவரங்கள் எவை?

பொதுவாகப் பூத்துக் காய்த்துக் கனிவதே வழக்கமாக இருந்தாலும், சில தாவரங்கள் பூக்காமலே காய்க்கும்.
எடுத்துக்காட்டாக, பலா பழம்.

பலாப்பழம் நேரடியாக காய்த்து விடும். ஒவ்வொரு சோலையும் ஒரு பூ தான். நூற்றுக்கனக்கானப் பூக்களும் ஒரே பழத்தில் அடங்கி கனிந்துவிடுகிறது.
இதே போல் அத்திப்பூ மலர்வதையும் பார்க்க முடியாது, கொத்துக்கொத்தாகப் பழங்கள் வளர்ந்துவிடும்.

“பூவாதே காய்க்கும் மரமுள மக்களுளும்

ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே ” – நல்வழி 35

பிறர் அறிவுரைகூறும் முன்பே தாமே பணி செய்வோரைக் குறிப்பிடுகிறார் ஔவையார்.

௯. பாரதியார் கூறும் ‘இரௌத்திரம் பழகு’ என்பதன் பொருள் என்ன?

“கோபத்தைப் பழக வேண்டும்” என்கிறார்.
ஒருவன் அமைதியாகவும், வளைந்து கொடுத்தும் இருப்பானாயின் அவனை இவ்வுலகம் பயன்படுத்திக்கொண்டு அடிமை படுத்தும்.
சொல்வதைத் தெளிவாகச் சொல்லவும், செய்வதைத் துணிந்து தைரியத்தோடு செய்யவும், அடுத்தவன் தன்னை ஏமாற்றாமல் இருக்கவும் நமக்கு கண்ணில் நெருப்பு போல கூறிய பார்வையும், ஒலிமிகுந்த குரலும் இருக்க வேண்டும். அவையெல்லாம் பெறுவதற்கு நாம் கோபத்தைப் பழகி அதை ஆயுதம் போல் பயன்படுத்த வேண்டும். இரௌத்திரம் பழகுவோம்!

௧௦. தமிழ் எண்களைப்  பயன்படுத்தியதுண்டா? 

தமிழ் எண்களை ஒவ்வொரு கேள்வியின் வரிசை எண்களில் கவனித்திருப்பீர்கள் என நம்புகிறேன். எளிதில் மனதில் மனப்பாடம் செய்ய கீழே உள்ள வரி உதவும்.

“டுகு, ““ளுந்து, ““னைத்து, ““மைச்சு, “ரு“சிச்சு, “சா“ப்பிட்டேன். ““ன, ““வன், “கூ”றினான், 

1 – க ; 2 – உ ; 3 – ங ;4 – ச ; 5 – ரு ; 6 – சா ; 7 – எ ;
8 –௮ ; 9 – கூ ; 0 – 0

௧௧. இறுதியாக வினாவைப் பற்றிய கேள்வி. “வினா”வின் வகைகள் என்ன?

அறுவகை வினாக்கள் உள்ளன.

அறிவினா      –  விடையைத் தான் முன்னரே அறிந்திருந்து பிறரை வினவுவது.
                (ஆசிரியர் மாணவிடம் கேட்கும் கேள்விகள். )
அறியா வினா  –  விடை தெரியாமல் கேட்கும் கேள்வி.
                (மாணவன் ஆசிரியரிடம் கேட்பது )
ஐய வினா     –  ஐயத்தைப் போக்கிக்கொள்ள கேட்கும் கேள்வி.
                (அங்கே கிடப்பது கயிறா இல்லை மின்கம்பியா?
கொளல் வினா  –  ஒரு பொருளைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் கேட்கும் கேள்வி.
                (காய்கறிக்கடைக்குச் சென்று, “பாகற்காய் இருக்கிறதா?” )
கொடை வினா  –  ஒரு பொருளைக் கொடுக்கும் பொருட்டு கேட்கும் கேள்வி.
                (வறியோரைப் பார்த்து, உண்பதற்கு உணவு இருக்கிறதா? )
ஏவல் வினா    –  ஒரு செயலை மற்றவரை செய்விக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கேட்க்கும் கேள்வி
                (ஆசிரியர் மாணவனிடம், “அன்புடைமையில் இருக்கும் குறள்களைப் பொருளுடன் மனப்பாடம் செய்துவிட்டாயா?” )

 

செவியுணவைப் பெறுவதற்கும், அறியாமையைப் போக்குவதற்கும் மனிதனுக்கு பயன்படும் கருவிகளில் வினவுதலுக்கு பெரும் பங்கு உண்டு.

செவியுணவின் முக்கியத்துவத்தை வள்ளுவரின் குரலில்(குறளில்) காண்போம்.

“எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் 
ஆன்ற பெருமை தரும்”

உரை: எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.

கேள்விகள் பல கேட்டு அறியாமையைப் போக்குவோம். உங்கள் நட்புக்களுக்கு இந்த பதிவைப் பகிருங்கள். உங்கள் கருத்தினை கீழே பதிவு செய்யுங்கள். நன்றி.

– ச. சமரசம்

11 comments

  1. நன்றி தோழி!

   வள்ளுவத்தைப் பின்பற்றி நடந்தால் இவ்வுலகில் எந்த ஒரு தீங்கும் நடைபெறாது!

   வாழ்க தமிழ! வளர்க வள்ளுவம்!

  1. நன்றி ங்க.

   பழமொழிகளைப் பற்றி பகிர்ந்ததற்கு மிக்க நன்றிங்க! அறியாமையை நீக்கும் பயனுள்ள தகவல்.

   வாழ்க தமிழ்!

 1. Interesting! After a long time, I read about these different topics. Presentation is good. Lot to learn in Tamil. Expecting more article like this.

  1. நன்றி தோழி!

   ஆம். கற்றது கைம்மண்ணளவே !

   உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி!

  1. நன்றி ஆல்பர்ட் நண்பரே!

   நமது கல்வித்திட்டங்களாலும், பல்வேறு சூழ்ச்சிகளாலும் தமிழின் சிறப்புகள் மறைக்கப்படுகின்றன. மீண்டும் நாம் தமிழின் செல்வங்களையும் சுவைகளையும் வெளிக்கொணர வேண்டும்.

   வாழ்க தமிழ்!

  1. நன்றி நண்பா!

   தமிழில் பல்லாயிரம் முத்துக்கள் இருக்கின்றன படிக்கப்படாமல். கற்போம்; கற்றதைப் பகிர்வோம்!

   வாழ்க தமிழ்!

 2. அருமையான வினாக்கள் அற்புதமான விடைகள் எனக்கு தெளிவுபடுத்தியது தித்திப்பை ஏற்படுத்தியத

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *