வணக்கம் தோழர்களே!

போட்டி! நாம் சிறு வயதில், பள்ளிகளில் ஆரமித்த ஒன்று. பள்ளிகள் தான் நமது முதல் வெளியுலக விழிப்புணர்வுக்கூடம், ஆசிரியர்கள் தான் நமது இரண்டாவது வழிகாட்டி! போட்டிகள் என்றாலே நமக்கு ஓர் ஆர்வம்தான். ஏனென்றால் வெற்றியின் சுவையே சுவைதான்! பரிசு பெற்றால் போதும், சுற்றி உள்ள உறவினர்கள் உட்பட அனைவரும் வாழ்த்துவார்கள். நமக்கு ஓர் அடையாளத்தை தருகின்ற வாய்ப்பு அது!

படிப்புப் பருவத்தில் உள்ள போட்டிகளையும், சுய வாழ்க்கைப் போட்டிகளையும் பற்றி இங்கு பேசுவோம்.

பாட்டுப் போட்டி
கட்டுரைப்போட்டி
பேச்சுப்போட்டி
ஓவியப்போட்டி

மற்றும் விளையாட்டுகளில்,
ஓட்டப்பந்தயம்
நீளம் தாண்டுதல்
உயரம் தாண்டுதல்
சாக்குப் போட்டி

என பல போட்டிகளில் பங்கு பெற்றிருப்போம். ஒவ்வொரு நேரமும் கேலிக்கு பயந்து நான் விளையாட்டுப்போடிகளில் பங்கு பெற்றதில்லை. ஒரு சில ஓட்டப்பந்தயங்களில் மட்டும் சிறுவயதில் பங்கு பெற்றிருக்கிறேன். எனது பெற்றோர்கள்  எழுத்து, கலை, சமுதாயம் போன்றவற்றில் ஆர்வம் உடையவர்களாதலால், எனக்கு ஏற்ற செயல்களில் வழித்துணை கிடைத்தது! அதனால், நான் ஓவியம், கட்டுரை, மாறுவேடம், பாட்டு போன்ற போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பும், ஆர்வமும் கிடைத்தது.

 

பாட்டுப்போட்டி! பாடல்கள் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே அமைந்துவிட்டது. அதன் ஆற்றல் எனக்கு எப்போதும் உறுதுணையாகவே நின்றுக்கொண்டிருக்கிறது. இன்று பல பாடல்கள் எனக்கு பல ஆண்டுகளில் நடந்த நினைவைக்கொடுக்கின்றன! சிறுவயதிலிருந்தே பாட்டுப்போட்டிகளில் பங்கு பெற்றிருக்கிறேன்.

பள்ளியில், நான் பொதுவாக பாட்டுப்போட்டி என்றாலே, பாரதியார் பாட்டு ஒன்றைத் தான் பாடுவேன். சில முறை இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளைப்பெற்றிருக்கிறேன். அந்த அருமையான வரிகள் சில கீழே!

விடுதலை! விடுதலை! விடுதலை!

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமை யைக்கொ ளுத்துவோம்;
வைய வாழ்வு தன்னில் எந்த
வகையி னும்ந மக்குளே
தாதர் என்ற நிலைமை மாறி
ஆண்க ளோடு பெண்களும்
சரிநி கர்ச மான மாக
வாழ்வம் இந்த நாட்டிலே!

விடுதலை! விடுதலை! விடுதலை!

அந்த சிறுவயதில், மேலுள்ள பாடலைப் பாடும்போது ஒரு தனிப் பற்றும், வீரமும் வரும்! வாழ்க பாரதி! வாழ்க அவரின் வீரமான கவிதைகள்!

ஒரு முறை அப்பாவின் அலுவலகத்தில் சிறுவர்களுக்கான போட்டியில், ரகுமான் அவர்கள் இசை அமைத்த வைரமுத்துவின் பாடல் “நிலா காய்கிறது நேரம் தேய்கிறது” பாடினேன். போட்டியில் வெற்றி இடத்தைப் பெறவில்லை. அது ஒரு நல்ல நினைவு! அவரவர் பாடல்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் அவர்களின் நடத்தையும் இருந்ததை உணர்ந்தேன்.

மேளதாளங்களுடன் கூடிய பாடல்கள் கேட்பவர்கள், நன்கு வெளிப்படையாய் பேசுவார்கள், அவர்களின் குரல் என்றும் வலிமையோடு இருக்கும், விளையாட்டுக்களில் ஆர்வம் உடையவர்களாகவும் இருப்பார்கள்.

மெல்லிசை பாடல்கள் கேட்பவர்களின் சிந்தனைகள் வலிமையோடு இருக்கும், எழுத்தின் வலிமை அவர்களுக்குத் தெரியும்.
சிந்தனை, புத்தகம், அன்பு ஆகியவற்றில் அதிகம் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இதை இப்போது நான் எழுதும் பொது கூட இசைஞானியின் பாட்டு ஒலித்துக்கொண்டிருக்கிறது!

 

அடுத்த மறக்க முடியாத  ஒரு போட்டி, மாறுவேடப்போட்டி!
சுதந்திர தினத்திற்கு நான் “பகத் சிங்” மாறுவேடம் போட்டு மூன்றாம் பரிசு பெற்றேன்.
அப்பா பகத்சிங்கின் முழக்க வரிகளைச் சொன்னார், அம்மா வீரத்தின் அடையாளமான மீசையை செய்து கொடுத்தார்கள்.

ஒரு தொப்பியும், மர நிறம் கொண்ட சட்டையும், அம்மாவின் கைத்திறத்தில் அமைந்த மீசையுடனும் (அம்மாவின் மீசை என்ற வார்த்தை நன்றாக இருக்கிறது) மேடையில் பகத் சிங்கின் வரிகளை உரக்கக் கர்சித்தேன்.

“இன்குலாப் ஜிந்தாபாத், இன்குலாப் ஜிந்தாபாத், இன்குலாப் ஜிந்தாபாத்”  என்று.

Bhagat Singh“இன்குலாப் ஜிந்தாபாத்’ இன் பொருள் “வாழ்க புரட்சி, நீடிக்கட்டும் புரட்சி!”

பகத் சிங்க் ஓர் மிகப்பெரிய வீரர், போராட்டத்தின் அடையாளம்.
அவரை நினைவில் கொண்டு, அவரைப் பின்பற்றிப் போற்றுவோம்! நமது சுதந்திரமும், உரிமைகளும் சாதாரணமாகக் கிடைக்கவில்லை! பகத் சிங், மற்றும் பல போராட்ட வீரர்களின் கடின போராட்டத்தாலும், அவர்களின் இழப்புகளாலும் தான் நாம் இன்று சுதந்திரமாய் உலாவிக்கொண்டிருக்கிறோம். நாம் ஒவ்வொருவரும், அனைத்து வீரர்களுக்கும் கடமைப் பட்டிருக்கிறோம்!

நினைவில் இருக்கும் அடுத்த நினைவு கல்லூரியின் மூன்றாம் ஆண்டில் நடந்த பென்சில் ஓவியப்போட்டி!
நண்பன் ‘கலைஞன் பிரேம் குமார்’ வரைந்த “அம்மா குழந்தை” ஓவியம் முதல் பரிசு பெற்றது. 

நானும், மெய்யப்பனும் ஒரு குழு. அவன் ஒரு யோசனைக் கொடுத்தான். மெழுகை ஏற்றுவது போல். அதில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஆதரவு கொடுப்பது போல் ஒரு சிந்தனை கலந்திருக்கும்.

271220071461 (1)
அதில் உள்ள கை, மெய்யப்பனின் கை தான், அவன் கையில் ஒரு அளவுகோலைக் கொடுத்து அதைப்பார்த்து வரைந்தேன்.
இந்த ஓவியத்தின் சிந்தனை இன்றும் நாம் சிந்திக்க வேண்டியவை.

இது போன்று ஓவியம், கட்டுரை, எழுத்துப் போட்டிகளில் நான் பங்கேற்றியிருக்கிறேன். அனைத்தும் நல்ல நினைவுகள் இன்றும் எனக்கு.

இவ்வாறு நாம் ஒவ்வொருவரும், படிப்பு பருவங்களில் பல போட்டிகளில் பங்கேற்றிருப்போம்! இன்று எத்தனை பேர் பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டிகளில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. பத்தாம் வகுப்பிலிருந்து மதிப்பெண் மதிப்பெண் என ஓட ஆரம்பித்துவிட்டோம். அன்றே பலருக்கு நமது கலை வாழ்வு நின்று விட்டது.

இன்று குடும்பம், வருமானம், தொழில் என்ற நிலைக்கு வந்தவுடன் ஒவ்வொரு நாளும் நாம் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறோம். அடுத்தவனிடம் ஒரு பொருள் இருந்தால், நமக்கு அது இல்லையே என்று வருத்தம்!
அடுத்தவன் நம்மைவிட 100 ரூபாய் அதிகம் பெற்றுவிட்டால் வாங்கிவிட்டால் போதும், போட்டி பொறாமை உடனே ஆரம்பித்துவிடுகிறது.

 

ஒன்று மட்டும் உண்மை, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்காது. பிறரிடம், செல்வங்கள் இருக்கும், அனால், நல்ல நண்பர்களோ, உறவினர்களோ இருக்க மாட்டார்கள். இதை நாம் உணர வேண்டும். போட்டியில் பொறாமையைக் கலக்காமல், வாழ்ந்தாலே நாம் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

குழந்தைகளை, சிறு வயது முதல் அறிவுப்பூர்வமான செயல்கள், மற்றும், விளையாட்டுக்களில் பங்கேற்க ஆர்வமும், ஒத்துழைப்பும் கொடுங்கள்.

வெறும் புத்தகக் கல்வியும், மதிப்பெண் போட்டியும் மட்டும் போதாது நமது எதிர்காலத்திற்கு.

சிறுவயதில்
பாட வேண்டும்,
பேச வேண்டும்,
ஓடி ஆட வேண்டும்
ஓவியம் வரைய வேண்டும்
நன்கு விளையாட வேண்டும்
பெற்றோர்களிடம் இருந்து கதைகளைக் கேட்க வேண்டும்.

குழந்தைகளுக்கு தாலாட்டுப் பாட்டு எவ்வளவு முக்கியமோ, அதைப்போல், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற நற்செயல்களும், விளையாட்டுக்களும் முக்கியம்.

நீங்களும், உங்கள் பயணத்தில் பங்கேற்ற அருமையான போட்டிகளைப் பற்றியும், அதிலுள்ள சுவை மிக்க தருணங்களையும் பகிரவும். உங்களுக்குத் தெரிந்த பல இன்று இல்லாமல் போன விளையாட்டுக்களையும் பதிவு செய்யுங்கள்.

கலை, இலக்கியம், விளையாட்டு, மொழி மற்றும் அனைத்தும் வாழ்க! வாழ்க பல்லாண்டு!

நன்றி,
ச. சமரசம்

9 comments

 1. Nice one Sam… With the current generation being techie kids, their fun n entertainment is only electronics… Totally agree with your last stmts ..Current generation Parents need to give time and make effort as our parents to promote healthy playtime…

  1. இக்கருத்துக்களை ஆதரித்ததற்கு மிக்க நன்றி, சுபா.
   நம் தலைமுறையிலிருந்தாவது, வரும் சந்ததிக்கு விளையாட்டுக்களை ஆதரிப்போம்.

   வலைப்பதிவைப் படித்ததற்கும், உங்கள கருத்தினை பகிர்ந்ததற்கும், மீண்டும் நன்றி!

 2. poetic lines – அம்மாவின் மீசை…

  From this blog, I knew many things which I dont know about my friend’s childhood pride…

  உங்கள் பதிவைப் பகிர்ந்ததற்கு நன்றி…!

 3. I am jealous of you Sam. I never attended any competition other than the “Paatu Potti”, that also two or three times. I had only one competition which was injected by people around me was getting highest mark among my area/family girls/boys. I never got a chance to play or doing any activities. I was always reading, reading, reading… only school books. After coming to US when I do things by my own and doing different activities which I missed in my childhood gives me more pleasure and make me realize that how much I missed. I wish next generation should stop running to win others than to win oneself/themselves.

  1. உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்

   ஆமாம், தோழி.
   இளையம் வயதில் தான் நாம் வளைய முடியும்.
   இளம் வயதில் அனைத்திலும் பங்கேற்றால் தான், பிறகு நமக்கு வாழ்வில் தைரியம் இருக்கும்.

   அன்றே பாரதி பாடியுள்ளார்,
   படிப்பும் வேண்டும், ஓடி ஆடி விளையாடவும் வேண்டும்.

 4. அருமை! உம் சிந்தனையை வரவேற்கிறேன். பள்ளியில் எனக்கிருந்த ஆர்வங்கள் பல. விளையாட்டு, எழுத்து, பேச்சு, கட்டுரை, நாடகம், நடனம் மற்றும் பல போட்டிகளில் பங்கேற்று வெற்றி அடைந்திருக்கிறேன். பிரபலமான என் திறமைகள் என்னவாயின யானறியேன். கல்விக்கூடம் என் கலைகளை அழித்தக் கூடமாகியது. திரும்பிப் பார்க்க வைத்தமைக்கு நன்றி.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *